வெள்ளி, 20 ஜனவரி, 2017





தமிழர் - திராவிடர் என மோதுகிறவர்களுக்கு வரலாற்று ஆயுதம் தருகிறார் பாட்டாளி
விவரங்கள்
எழுத்தாளர்: திருப்பூர் குணா
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
 வெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2015
இன்று அரசியல் மேடைகளிலும், முக நூலிலும் சூடு பறக்க நடைபெறும் விவாதம் தமிழர் - திராவிடர் விவகாரமே. மிகவும் அவசியமான இந்த விவாதம் தலைமைகளின் பலவீனத்தால் அருவருப்பாகியுள்ளது. கெட்டவார்த்தைகளால் அர்ச்சனை செய்துகொள்ளும் தொண்டர்களின் போக்கு உலகின்முன் நம்மை வெட்கி தலைக்குனிய வைக்கிறது.
இந்த நிலையில்தான் தோழர் பாட்டாளியின் "திராவிட நாடும் தேசிய இன விடுதலையும்" என்ற ஆய்வுநூல் நம்மை பெருமிதம் கொள்ளச்செய்கிறது.
'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என தவறான பிரச்சாரம் காதை அடைக்கும் வேளையில் இந்நூல், இல்லையில்லை கல்வியில், வேலை வாய்ப்பில், சமூக உரிமைகளில் இருந்த பார்ப்பன ஆதிக்கத்தை முறியடித்து தமிழர்களாகிய அனைத்து சாதி மக்களுக்கும் சில உரிமைகளையேனும் பெற்றுத் தருவதில் திராவிட இயக்கத்தின் பங்கு மறுக்க முடியாதது என நிறுவுகிறது.
ஒட்டுமொத்த தமிழர்களையோ அல்லது குறிப்பிட்ட சாதியையோ ஆண்டபரம்பரை எனும் பொய் அரசியலில் மூழ்கடிக்கும்போது வெள்ளையர்கள் காலத்திலும்கூட கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூக உரிமைகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கமே இருந்தது என்பதை நூல் உணர்த்துவது மிகப்பொருத்தமானதே.
முதலாம் உலகப்போர் மற்றும் அதன் தாக்கத்தினால் இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களும், டொமினியன் ஆட்சிமுறைக்கான கோரிக்கைகளும் ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடி கொடுத்ததையும்; மாண்டேகு - செம்ஸ்போர்ட் திட்டம் உருவானதையும்; அதன் மூலம் 1919- இல் இரட்டை ஆட்சிமுறைக்கான சட்டம் இயற்றப்பட்டதையும்; இதைப் பயன்படுத்திக்கொண்டு தென் இந்திய நல உரிமைச் சங்கம் அதிகாரத்தை கைப்பற்றியதையும்; தென் இந்திய நல உரிமைச் சங்கம்தான் அதன் பத்திரிகையான "ஜஸ்டீஸ்" இதழின் பேரால் ஜஸ்டீஸ் பார்ட்டியாகவும், பின்னர் தமிழ்ப்படுத்தி "நீதிக் கட்சி"யாகவும், பின்னர் தந்தை பெரியாரின் தலைமைக்குப் பிறகு அது திராவிடர் கழகமாகவும் உருவான வரலாற்றை நூல் நினைவுப்படுத்துவது அவசியமானது.  
நீதிக் கட்சிதான் தேர்தலில் இட ஒதுக்கீட்டையும்; கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டையும்; பெண்களுக்கு வாக்குரிமையையும்; அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தையும் உருவாக்கி சமூக சீர்திருத்தத்தை தொடங்கி வைத்தது என்பதை இந்நூல் நினைவூட்டுகிறது.
இவ்வாறு பார்ப்பனர் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட மன்னர்கள் காலம் தொடங்கி பார்ப்பனர் ஆதிக்கத்தை பாதுகாத்து வந்த வெள்ளையர் காலம் வரைக்கும் தமிழக மக்கள் மீது நிலவி வந்த ஒடுக்குமுறையை எதிர்த்து நின்ற திராவிடர் இயக்கம் என்பது அன்றைக்குத் தேவையான சீர்த்திருத்த இயக்கமே அல்லாது இன்றைக்கு சிலர் சொல்வதுபோல் தமிழரை வீழ்த்திய இயக்கமல்ல என்பதை நூலில் புரிந்துகொள்ள முடியும்.
தமிழர் - திராவிடர் அரசியலைக் குறித்துத் தெளிவாக்குவதற்கு மனித சமூகத்தின் தோற்றத்திலிருந்து தொடங்க வேண்டுமென தோழர் மெனக்கெட்டிருப்பதுதான் முக்கியமானது. இங்கு தமிழ்க்குரங்குதான் உலகத்தில் இருந்ததுபோலவும், அதிலிருந்து மனித இனம் தமிழினமாகத்தான் பிறந்ததுபோலவும், தமிழினத்தில் இருந்துதான் உலகமே தோன்றியதுபோலவும் ஒரு மாயாவாதம் நிலவுகிறது. இப்படியான வெற்றுப்பெருமிதங்களில் இருந்து நம்மை விடுபட வைக்கிறது இந்த நூல்.
அதற்காக தமிழர்களின் பெருமைகளை ஆசிரியர் எந்த விதத்திலும் மறைக்கவுமில்லை. வரலாற்றை அதன் வழியிலேயேப் புரிந்துகொள்ள பாடுபட்டிருக்கிறார். குமரிக் கண்டம் குறித்தும், பல்வேறு கண்டங்கள் தோன்றியது குறித்தும், அவற்றின் காலங்கள் குறித்தும் ஆசிரியர் தரும் தரவுகள் அற்புதமானது. அதுபோலவே மனித இனம் எந்த கண்டத்தில் முதலில் தோன்றியது, அதுகுறித்து மாறுபட்ட கண்ணோட்டங்களில் அறிவியல்பூர்வமான விவரங்கள் என்ன? என்பதையும் நமக்கு முன்னே கொட்டி பரிசீலிக்க வைக்கிறார்.
திராவிடர்கள் யார்? ஆரியர்கள் யார்? என்பதை பழையத் தரவுகள் ஆனாலும், அவற்றை வரிசைப்படுத்தி நமக்கு நினைவூட்டுவது அவசியமாகவே உள்ளது. திராவிட என்றச் சொல் தமிழ் இலக்கியங்களைவிட ஆரிய இலக்கியங்களில் நிறைந்து கிடப்பதையும், ஆரியர்களே இச்சொல்லை முதலாவதாகவும், முக்கியமாகவும் பயன்படுத்தியுள்ளதையும் ஆசிரியர் ஆதாரத்தோடு கூறுகிறார்.
இது நமக்கு ஒரு விசயத்தை விளங்க வைக்கிறது. ஆரியர்கள் "திராவிடர்" என்ற பொது அடையாளத்தை இத்துணைக்கண்டத்தில் இருந்த பல்வேறு சமூக மக்களுக்கும் பொருத்தியுள்ளனர். அப்படியானால் ஆரியர்களுக்கு இங்கிருந்த பல்வேறு மக்கள் சமூகங்களின் தனித்தனி அடையாளங்களாக மாறிவிட்ட மொழிவழி சமூகப்போக்கைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் அவர்கள் மொழிவழி சமூகங்களாக வளர்ச்சியடையாத நிலையிலும், அதனால் அதுகுறித்து புரிந்துகொள்ள முடியாத நிலையிலும் இருந்திருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
அதேநேரத்தில் இத்துணைக்கண்டத்தில் உள்ள மக்கள் சமூகங்கள் தம்மை திராவிடர் என்றோ அல்லது வேறெதேனும் ஒரு பொதுச்சொல் கொண்டோ அழைத்துக்கொண்ட பழைய ஆதாரங்கள் இல்லையென்பது, இங்கு மொழிவழி சமூகங்கள் உருவாகி நெடுங்காலம் ஆகிவிட்டது என்பதற்கு ஆதாரமாக இருக்கலாம்.
17- ஆம் நூற்றாண்டுகளில் இருந்து (தாயுமானவரின் செய்யுளில் இருந்து) தமிழ் இலக்கியங்களிலும், 1885- இல் இருந்து (திராவிட மித்ரன் இதழ் தோன்றியதிலிருந்து) அரசியல் அரங்கிலும் திராவிடன் என்ற அடையாளம் செல்வாக்குப் பெறுவதாக ஆசிரியர் ஆதாரங்கள் தருகிறார்.
அதுபோல 1985- இல் அயோத்திதாசப் பண்டிதர் "திராவிடப் பாண்டியன்" இதழ் தொடங்கியதையும், ஒடுக்கப்பட்ட மக்களிடம் "ஆதி திராவிடர்" அடையாளம் தோன்றியதையும் நூல் நினைவூட்டுகிறது.
ஆக இந்திய அரசதிகாரத்தில் தொடர்ந்து நீடித்து வந்த பார்ப்பனர் மற்றும் வட நாட்டு மூலதனம் ஆகிய கூட்டு ஆதிக்கத்தின் எதிர்விளைவே திராவிட அரசியல் என்பதை ஆசிரியர் நிறுவி விடுகிறார்.
திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்துவதுபோல் பெரியாரையும் கொச்சைப்படுத்தும் போக்குக்கு நூல் தகுந்த முறையில் பதிலளிக்கிறது. "இதுபோலத்தான் 1935 வரை அகில இந்தியா என்று பேசி வந்த நான் வட நாட்டார் ஆதிக்கத்தை உணர ஆரம்பித்ததும் 1938-இல் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை கடைபிடிக்க ஆரம்பித்தேன்.... ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வருகிறேன்.... இனி திராவிடர் பதம் நமக்குத் தேவையில்லை. தமிழர், தமிழ்நாடு என்ற விளிப்பே போதுமானது" என்னும் பெரியாரின் சீர்திருத்த அரசியல் வளர்ச்சியடைவதை நூல் தெளிவாக முன்வைக்கிறது. நடைமுறையில் அதை அவர் இறுதிவரை கறாராக கடைப்பிடித்ததையும் நிரூபிக்கிறது.
எப்படி கம்யூனிஸ்ட் இயக்கங்களை வகைபிரித்து இப்போது நாம் அணுகுகிறோமோ, அதுபோலவே பெரியாருக்குப் பிந்தைய திராவிட இயக்கங்களையும் அணுக வேண்டும் என்பதை நூல் புரிய வைக்கிறது.
பெரியாரின் சமகாலத்திலேயே தோன்றிய மா.பொ.சி-யின் தமிழரசுக் கழகமும், ஈ.வே.கி-யின் தமிழ்த் தேசியக் கட்சியும், சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் இயக்கமும் பேரில் தமிழ் அடையாளத்தைக் கொண்டிருந்தபோதும் செயலில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லையென ஆசிரியர் குறை காணுகிறார்.
வரலாற்றின் தேவையிலிருந்து திராவிட இயக்கமெனும் சீர்திருத்த அரசியல் செல்வாக்கு செலுத்தியதையும், அதில் பெரியாரின் பாத்திரத்தையும் மறைக்காமல் ஒப்புக்கொள்கிற ஆசிரியர், இன்றைக்கு தமிழ்ச்சமூகத்தின் தேவை இதுபோன்ற சீர்த்திருத்த இயக்கங்களல்ல, மாறாக புரட்சிகர இயக்கமே அதன் தேவை என்று இறுதி செய்கிறார். இவ்வகையில் இந்நூல் சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஒரு ஆயுதமாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.
சில மாறுபாடுகள்:
1. நூலில் ஆசிரியர் இனக்குழுக்களின் வளர்ச்சியே மரபினம் என்கிறார். இவ்வகையில் தமிழினக் குழுக்களின் வளர்ச்சிப்போக்கே திராவிட மரபினம் எனக் கூற முனைக்கிறார். இது தவறு என்பதே நம் பார்வை.
மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறும் போக்கில் பல்வேறு கண்டங்களுக்கும் பரவியது மனிதனாக முழுமையடையாத மனிதக் குரங்குகளே. அவை மனிதனாக முழுமை அடையும்போது ஒவ்வொரு கண்டத்தின் தட்ப, வெட்ப நிலைகளுக்கு ஏற்ற வகையில் முழுமையடைந்தான். அது உடல் அமைப்பில், தோற்றத்தில் முழுமையடைந்த வளர்ச்சிப்போக்கேயாகும். இதைக் கொண்டுதான் மனித சமூகத்தை மரபினங்களாக வகைப்படுத்துகின்றனர்.
இந்த மரபினங்களின் வளர்ச்சிப்போக்கில் மொழியினங்களான இனக்குழுக்கள் உருவாவதும், ஒருமொழி இனக்குழுக்களின் ஒன்று கலத்தல் என்ற வளர்ச்சிப்போக்கில்தான் தேசிய இன உருவாக்கமும், தேசங்களின் உருவாக்கமும் நடைபெறுகிறது என்பதே சரியாகும்.
2. திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் பேசுகிற ஆசிரியர் அதனை முன்னெடுத்த வர்க்கங்களின் பாத்திரத்தைப் பேசவில்லை.
பனகல் அரசரும், டாக்டர் நடேசன் முதலியாரும் முன்னெடுத்து பின்னர் டி.எம். நாயர், தியாகராய செட்டியார் போன்றோரும் இணைந்து திராவிட இயக்கத்தை வளர்த்ததென்பது ஊழைக்கும் மக்களின் பொருளாதார விடுதலைக்கல்லவே. அதற்கான திட்டத்தோடல்லவே. அப்படியானால் அவர்களின் பொருளாதார நலன் எந்த வர்க்கத்தின் பின்னணியைக் கொண்டது என்பது முக்கியமில்லையா. இதில் ஆசிரியர் கவனம் செலுத்தவில்லை.
உழைக்கும் மக்களின் பொருளாதார விடுதலைக்கில்லாத சீர்திருத்த இயக்கத்தில் உழைக்கும் மக்கள் பங்கெடுக்க வேண்டிய அவசியம் பற்றியும் ஆசிரியர் அக்கறை கொள்ளவில்லை. இது தொடர்ச்சியாக எல்லோரும் செய்கிற தவறாக உள்ளது. இந்தப் பார்வை இல்லாததாலே ஒரு சாரர் திராவிட இயக்கத்தை புரட்சிகர இயக்கமாக உச்சத்துக்கு தூக்கி வைப்பதும்; ஒரு சாரர் அதன் சீர்திருத்தப் பாத்திரத்தைக்கூட மறுத்து அது தமிழர் வாழ்வை சீரழித்தது என அவதூறு பேசுவதும் நீடிக்கிறது.
3. இன்றையத் தேவையாக புரட்சிகர தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துகிற ஆசிரியர் "எமது மொழி தமிழ், எமது இனம் தமிழர், எமது தாயகம் தமிழர் நாடு" என்கிறார். இது தமிழ்ச்சமூகத்தில் இருக்கும் வர்க்க வேறுபாட்டை மறைத்து விடுகிறது. தமிழ் முதலாளிகளில் தரகு முதலாளிகள் (சன் குழுமம் உட்பட) இருப்பதையும், அவர்கள் நம்மிடம் (ஈழம் முதலான அரசியலில்) இன உணர்வை தூண்டி அரசியல் ஆதாயம் அடைவதையும் பார்க்க முடியாமல் செய்து விடுகிறது.
அதுபோலவே "அந்தத் தமிழர் நாட்டில் (வர்க்கப் பார்வையற்ற தமிழ் நாட்டில்) நின்றுகொண்டு நம்மைப் போலவே (நாம் ஏற்கனவே விடுதலையடைந்ததைப் போலவே) பிற தேசிய இன விடுதலைக்கும் பாடுபடுவோம்" என்கிறார். இது இன்றைய உலக நிலைமைகளான ஒடுக்கும் நாடுகள் எல்லாம் இணைந்து ஒவ்வொரு தேசிய விடுதலையையும் நசுக்கி அழிப்பது குறித்தும்; அதில் இந்தியா தேர்ச்சிப்பெற்ற நாடாக இருப்பது குறித்தும்; கஷ்மீர், பஞ்சாப் முதலான விடுதலை இயக்கங்களை அழித்தொழித்ததோடு ஈழத்திலும் கொடும் பாத்திரமாற்றிய நாடென்பதை குறித்தும் அறியாத உணர்ச்சி அரசியலேயாகும்.
உலகமயமாக்கலுக்குப் பிறகு ஒடுக்கும் நாடுகளின் ஒருங்கிணைந்த செயற்பாட்டை எதிகொள்ள ஒடுக்கப்படும் நாடுகளின் விடுதலை இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமென்பதை பார்க்க முடியாமல் செய்து விடுகிறது.
ஒரு மாற்று பாதையை நாமக்களிப்பதில் ஆசிரியர் சறுக்கினாலும், ஒரு வரலாற்று புரிதலை நாமக்களிப்பதில் வெற்றி பெற்றுள்ளார். அதனால் நாம் மாற்றுப் பாதையை புரிந்துகொள்ள வழியேற்படுத்தியும் தந்துள்ளார். மிக முக்கியமான இந்த நூல் சமூக செயற்பாட்டாளர்களுக்கு மிகமிக அவசியமானதாகும்.
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/27720-2015-01-20-13-57-47

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக